ஹார்முஸ் ஜலசந்தி வருவாய் பகிர்வில் ஈரான் ஓமனுடன் ஒப்பந்தம்! அமெரிக்கா ஒப்புதல் அளிக்குமா?
செய்தி முன்னோட்டம்
சர்வதேசக் கடல்வழி எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் கட்டண வருவாயைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஈரானும் ஓமனும் ஓர் உடன்பாட்டிற்கு வந்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) செய்தித் தொடர்பாளர் உசேன் மொஹெபி அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
அமெரிக்கா
அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி வழித்தடம் திறக்கப்படாது
ஓமன் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாகத் திறந்துவிடப்படாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா தனது ஒப்புதலை அளித்து, தடை விதிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகினால் மட்டுமே கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்காவிட்டால், எக்காரணம் கொண்டும் ஹார்முஸ் வழித்தடம் திறக்கப்படாது என ஈரான் எச்சரித்துள்ளது.
உலகளாவிய அபாயம்
உலகளாவிய ஆற்றல் சந்தையும் கப்பல் போக்குவரத்து அபாயமும்
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா - ஈரான் இடையே போர் வெடித்ததில் இருந்து இந்தப் பகுதி வழியாக வர்த்தகக் கப்பல்கள் செல்வது பெருமளவில் முடங்கியுள்ளது.
இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்வதேச எரிபொருள் சந்தையில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது.
எகனாமிக் டி-டே
எகனாமிக் டி-டே மற்றும் இந்திய நிறுவனங்கள் மீதான தடை
இதனிடையே, ஈரானுக்கு எதிரான பொருளாதாரக் கெடுபிடிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட் என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் பெட்ரோலியப் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி, இந்தியாவில் இயங்கி வந்த 4 தனியார் நிறுவனங்கள் மீது அமெரிக்க நிதியமைச்சகம் தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை சட்டவிரோத அச்சுறுத்தல் என விமர்சித்துள்ள ஈரான், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணியப்போவதில்லை என மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளது.