புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டம்: பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடங்கள் பரிசீலனை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருவதால், தமிழக அரசிற்கு புதிய நவீன தலைமை செயலக வளாகத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலக வளாகத்தை அமைப்பதற்குத் தற்போது இரு முக்கிய இடங்கள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 1.பட்டினப்பாக்கம்: கடலை ஒட்டிய சீரான போக்குவரத்து வசதி கொண்ட பகுதி. 2.கிண்டி ரேஸ் கோர்ஸ்: நகரின் மையப் பகுதியில் பரந்து விரிந்த பரப்பளவு கொண்ட பகுதி. இவற்றுடன் சேர்த்து நகரின் பிற சில முக்கியப் பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், இடத்தின் அதிகாரப்பூர்வத் தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
முதலமைச்சர் அலுவலகம்
முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு தற்காலிக மாற்றம்
புதிய தலைமை செயலக வளாகத்தின் கட்டுமானம் பூர்த்தியாகும் வரை, முதலமைச்சரின் அலுவலகத்தை (CMO) தலைமைச் செயலக வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மூத்த அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக இந்த இடமாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.
2003 (ஜெயலலிதா ஆட்சி காலம்): குயின் மேரிஸ் கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, எதிர்ப்புகள் காரணமாகக் கைவிடப்பட்டது.
ஓமந்தூரார் வளாகம் (கருணாநிதி ஆட்சி காலம்): ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டாலும், 2011-இல் ஆட்சி மாற்றத்திற்குப் பின் அது அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.