இந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா?
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவும் பிரச்னையில் இருந்து அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் விலகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவுடனான உறவுகளில் முன்னேற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருவதால், குறிப்பாக சீனாவை விஞ்சும் முயற்சியில் அமெரிக்கா ஈடுப்பட்டுள்ளதால், இந்தியா- கனடா பிரச்சனையில் இருந்து அமெரிக்கா விலகி இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்ட விவகாரத்தினால், இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்பதால், இந்தியா-கனடா சர்ச்சையில் அமெரிக்கா நடுநிலையான நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவுக்கு எதிராக எந்த நட்பு நாடும் நடவடிக்கை எடுக்கவில்லை
எனினும், நிஜ்ஜார் கொலை தொடர்பான கனடாவின் விசாரணைக்கு கடந்த வாரம் அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருந்து. ஆனால், "இந்தியாவுடனான எங்கள் உறவு மிகவும் முக்கியமானது" என்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா கனடாவுக்கு ஒத்துழைத்து அதற்கு "பொறுப்பேற்க" வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிற நாடுகளுக்கு கனடா அழைப்பு விடுத்த போதிலும், அமெரிக்காவும் மற்ற நட்பு நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.