பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம்: கனடாவுடன் இணைந்து பணியாற்றி வரும் அமெரிக்கா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை சுட்டுக் கொன்றதில் இந்திய அரசின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கனடாவில் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "இந்தக் விஷயத்தில் எங்கள் கனேடிய சகாக்களுடன் நாங்கள் நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம்." என்று தெரிவித்துள்ளார். திங்களன்று(அமெரிக்க உள்ளூர் நேரம்) நடந்த தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது மில்லர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் குற்றம் சாட்டினார்.
இதுவரை இந்திய-கனட பிரச்சனையில் என்ன நடந்தது?
இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் கனேடிய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியா இந்த குற்றசாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது பற்றிய குற்றசாட்டை ஆதரிக்க கனடா இதுவரை எந்த பொது ஆதாரத்தையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது.