'கனடாவுக்கு அல்ல, இந்தியாவுக்கு தான் அமெரிக்கா ஆதரவு தரும்': அமெரிக்க அதிகாரி
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கு "பெரிய ஆபத்தை" விளைவித்து தந்துள்ளதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார். மேலும், கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையே ஏதாவது ஒரு நாட்டை அமெரிக்கா தேர்வு செய்ய வேண்டியிருந்தால், இந்தியாவின் உறவு "மிக முக்கியமானதாக இருப்பதால்" அமெரிக்கா இந்தியாவையே தேர்வு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். கனடாவை விட இந்தியா மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், கனடா இந்தியாவை சண்டைக்கு இழுப்பது "யானைக்கு எதிராக எறும்பு சண்டையிடுவது" போன்றது என்றும் தெரிவித்துள்ளார்.
'கனடா ஏன் ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது': ரூபின்
கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி குறித்து தொடர்ந்து பேசிய முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், "ட்ரூடோவின் ஆட்சி முடிய இன்னும் நீண்ட காலம் இல்லை. அவரது ஆட்சிக்கு பிறகு கனடாவுடனான உறவை மீட்டு அமைத்துக்கொள்ள அமெரிக்காவால் முடியும்." என்று தெரிவித்தார். "பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் பின்வாங்க முடியாத வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அல்லது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அங்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. இல்லையென்றால் இந்த அரசாங்கம் ஏன் ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்" என்று ரூபின் கூறியுள்ளார்.