அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பிய எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது. "நேற்று இரவு மருத்துவமனைகளின் ஜெனரேட்டர்கள் மற்றும் இன்குபேட்டர்களை இயக்க போதுமான எரிபொருளை நாங்கள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வழங்கினோம்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். ஆனால் அந்த எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெற வேண்டாம் என ஹமாஸ் அழுத்தம் வழங்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோவையும், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை. எரிபொருள் பற்றாக்குறையால் 3 குழந்தைகளும், அறுவை சிகிச்சை செய்ய மின்சாரம் இல்லாததால் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக, ஹமாசால் நடத்தப்படும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மீட்கப்படுவதில் குறுக்கிடும் ஹமாஸ்
அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் மீட்கப்படுவதில் ஹமாஸ் குறிப்பிடுவதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அதன் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட், "நாங்கள் மூன்றாம் தரப்பினர் மூலமாக கூட, ஒரு தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். சோகமாக, அல்-ஷிஃபா மருத்துவமனைக்கும், எரிபொருளுக்கும் இடையே ஹமாஸ் குறிக்கிடுகிறது" என தெரிவித்தார். நேற்று 300 லிட்டர் எரிபொருளை, மருத்துவமனைக்கு வழங்க அதன் அருகில் கொண்டு சென்றதாகவும், ஆனால் மருத்துவமனையால் அது பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் ரிச்சர்ட் ஹெக்ட் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 300 லிட்டர் எரிபொருள் எவ்வளவு காலத்திற்கு மருத்துவமனைக்கு பயன்படும் என்பது தனக்குத் தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக, காசாவில் உள்ள குழந்தைகளை மீட்டு சிகிச்சை வழங்க இஸ்ரேல் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் வழங்கும் எரிபொருள் அரை மணி நேரம் மட்டுமே நீடிக்கும்- மருத்துவர்
இஸ்ரேல் வழங்கும் 300 லிட்டர் எரிபொருள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு, அரை மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கும் என அம்மருத்துவமனையின் மருத்துவர் பிபிசி இடம் தெரிவித்துள்ளார். அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 24,000 லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என, அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் மர்வான் அபு சாதா கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் உள்ள ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டாலும் 9,000 எரிபொருள் வரை செலவாகும். மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால், கடந்த இரண்டு நாட்களில் 45 நபர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பிணங்களை புதைப்பதற்காக, 4 பெரிய குழிகளை மருத்துவமனை ஊழியர்கள் வெட்டியுள்ளனர். இன்னும், 100 பிணங்கள் மருத்துவமனையில் புதைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அல்-ஷிஃபாவில் 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்
காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், அல்-ஷிஃபா மருத்துவமனையில் 2,300 நபர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் 600-650 நோயாளிகளும், 200-500 சுகாதாரப் பணியாளர்களும், சுமார் 1,500 மக்களும் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரில், 11,180 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 4,609 குழந்தைகளும், 3,100 பெண்களும் அடங்கும். மேலும், 28,200 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போர் தொடங்கியதற்கு பின்னர், காசாவிற்கு செல்லும் மின்சாரம், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் துண்டித்தது. காசாவிற்கு எரிபொருள் வழங்கப்பட்டால், ஹமாஸ் அதை தவறாக பயன்படுத்த கூடும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.