கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன?
சீன நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2ஆம் அலையின் போது கூட சீனாவில் 1 லட்சத்தைத் தாண்டாதக் கொரோனா பாதிப்பு தற்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதற்கிடையில், அந்த நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வேறு வெடித்துள்ளது. வரலாறு காணாத போராட்டம் எதற்காகத் தெரியுமா? அதிக கொரோனா பரவலைத் தடுக்க சீன அரசு அமல்படுத்திய "ஜீரோ கோவிட் ஸ்ட்ராட்டஜி" என்னும் திட்டமே இந்த போராட்டங்களுக்கான காரணம். இந்த திட்டத்தின் மூலம் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. லாக்டவுன் பகுதிகளில் கடைகள், பள்ளிகள் எதுவுமே செயல்படவில்லை. மேலும், பொது மக்கள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சீனர்கள் படும் அவதி
இது போன்ற கட்டுப்பாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக சீன மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். இது போக, ஊடக கட்டுப்பாடுகள், இணைய கட்டுப்பாடுகள், பொருளாதார சிக்கல்கள் என சீன மக்கள் இந்த திட்டத்தால் சந்தித்து வரும் பிரச்சனைகள் ஏராளம். சீன அரசின் இந்த கொள்கையால் சமீபத்தில் ஒரு பேருந்து விபத்தில் 27 பேரும், விஷவாயு தாக்கி ஒரு 3 வயது குழந்தையும், தீ விபத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். அதனால், சீன அரசின் இந்த போக்கை எதிர்த்து சீனா முழுவதும் 17 நகரங்களில் 23 பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது. சீன மக்கள் அரசை எதிர்த்து மாபெரும் போராட்டங்களை நடத்துவது அரிது என்பதால் உலக நாடுகளின் கவனத்தை இந்த போராட்டங்கள் ஈர்த்துள்ளது.