செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: சரக்குக் கப்பலில் 6 பேர் பலி, 10 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
செங்கடலில் மோச்சா துறைமுகத்திற்குத் தெற்கே பயணித்துக் கொண்டிருந்த வணிக சரக்குக் கப்பல் மீது ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் பலத்த காயமடைந்தனர். தான்சானியா கொடியுடன் பயணித்த 'திஹாமா' என்ற சரக்குக் கப்பலை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தினர். முதல் தாக்குதலில் கப்பலில் தீப்பற்றி பாகிஸ்தானை சேர்ந்த மூவர் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர் என நான்கு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர் தாக்குதல்
மீட்புக் குழுவினர் மீதும் தொடர் தாக்குதல்
கப்பலில் இருந்து மக்களை மீட்க முயன்ற மீட்புக் குழுவினர் மீது இரண்டாவது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
உதவிக்கு சென்ற ஏமன் கடற்படை மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
சவூதி அரேபியாவின் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்றதால் இத்தாக்குதலை நடத்தியதாக ஹவுதிகள் உரிமை கோரியுள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குற்றச்சட்டை மறுத்துள்ள ஏமன் சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட அரசு, இக்கப்பல் உணவுப் பொருட்களை மட்டுமே ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல் என்றும், இது கிளர்ச்சியாளர்களின் தேவையற்ற அச்சுறுத்தல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கிய பிறகு ஹவுதிகள் நடத்திய முதல் உயிர்ப்பலி தாக்குதல் இதுவாகும்.