இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு
தீ மிதிப்பது, அலகு குத்துவது போன்ற பல வினோத வழிபாடுகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டாலும், எரிமலைக்குள் ஆடு மாடுகளை தூக்கி வீசும் வழிபாடுகளை இதுவரை கேட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு வழிபாட்டை தான் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த இந்துக்கள் பின்பற்றி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை யத்ன்யா கசடா என்ற திருவிழாவின் ஒரு பகுதியாக ஆடு, கோழி, காய்கறி மற்றும் உணவு வகைகள் நெய்வேத்தியமாக ப்ரோமோ மலையில் இருக்கும் எரிமலை குழிக்குள் வீசப்பட்டது. ஒவ்வொரு வருடமும், அந்த பகுதியை சேர்ந்த டெங்கர் பழங்குடியினர் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று வேண்டி கொண்டு, இறைவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பதை இந்த மலைக்கு மேல் நின்று எரிமலைக்குள் வீசுகின்றனர்.
சிலர் முட்டைகோஸ், கேரட் போன்ற காய்கறிகளையும் எரிமலைக்குள் வீசி எறிந்தனர்
இப்படி செய்தால் தங்களது பிரார்த்தனை நிறைவேறும் என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த வருட திருவிழாவின் போது, டெங்கர் பழங்குடியினரைச் சேராத சில கிராமவாசிகள், ஆடு மாடுகள் குழிக்குள் விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்கு வலைகளை எடுத்து சென்று அவைகளை காப்பாற்ற முயன்றனர். சிலர் முட்டைகோஸ், கேரட் போன்ற காய்கறிகளையும் எரிமலைக்குள் வீசி எறிந்தனர். "எங்களிடம் வீட்டில் நிறைய பசுக்கள் உள்ளன. இது அதிகப்படியானதாகக் கருதப்படலாம், எனவே நாங்கள் இதை இங்கே எடுத்து வந்திருக்கிறோம். இதை கடவுளிடம் திருப்பித் தர முடிவு செய்துள்ளோம்." என்று ஒரு பழங்குடியின விவசாயி AFPஇடம் கூறியிருக்கிறார். கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு, தற்போது தான் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சென்ற வருடம் இந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தன.