ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள்
ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்று போன இந்திய வம்சாவளி மாணவரின் உயிரை இங்கிலாந்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அமெரிக்கா வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் பகுதியில் வசித்துவருபவர் அதுல் ராவ். இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பட்டபடிப்பினை படித்து வருகிறார். அண்மையில் கல்லூரியில் இவர் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவரை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நுரையீரலில் ரத்தம் உறைந்துள்ளது. அதனால் அவரது இதயத்துடிப்பு நின்று போயுள்ளது என்று கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து, அவருக்கு ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்து தீவிர சிகிச்சையளித்துள்ளனர்.
உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மாணவர்
ஆனால் சிகிச்சையளித்து கொண்டிருக்கையிலேயே அதுல் ராவின் இதயத்துடிப்பு மேலும் 5 முறை நின்றுள்ளது. இது அவரின் உடல்நிலையினை மேலும் சிக்கலாகியுள்ளது. எனினும், மருத்துவர்கள் விடாமுயற்சியோடு இரவு முழுவதும் முயன்று அவரது உயிரினை காப்பாற்றியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன நிலையிலும், இங்கிலாந்து மருத்துவர்கள் மாணவரின் உயிரை காப்பாற்றிய தருணம் மிக ஆச்சர்யத்தில் அங்குள்ளவர்களை ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அதுல் ராவ் தனது பெற்றோருடன் மீண்டும் அந்த மருத்துவமனை சென்று, தனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து நன்றி கூறியுள்ளார்.