ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள, மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பசிபிக் பெருங்கடலில் குதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீயானது வரலாற்றுச் சிறப்புமிக்க ரிசார்ட் நகரமான, லஹைனாவை முழுவதுமாக அழித்துவிட்டது. காட்டுத் தீ, லஹைனா, அதன் துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழித்ததால், பல கட்டிடங்கள் மற்றும் பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்த நிலையில், 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் தீவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில், மவுய் தீவுக்கு சுற்றுலாவுக்காக வந்த பல சுற்றுலாப் பயணிகள், விமான நிலையத்தில் முகாமிட்டு, மவுயிலிருந்து விமானங்கள் புறப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர்.
1960க்குப் பிறகு ஹவாயில் ஏற்பட்ட மோசமான பேரழிவு
1960-ஆம் ஆண்டு, ஹவாய், அமெரிக்க மாநிலமாக மாறிய ஒரு வருடத்திற்குப் பிறகு, சுனாமியில் 61 பேர் இறந்ததனர். இதுதான் ஹவாய் சந்தித்த கடைசி மிகப்பெரிய பேரழிவாக இருந்த நிலையில், அதற்கு பிறகு மிகப்பெரிய பேரழிவாக இந்த காட்டுத் தீ கருதப்படுகிறது. காட்டுத் தீயால், மவுய் தீவின் 80 சதவீத பகுதிகள் சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தீவை முழுமையாக புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளதாக ஹவாய் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஹவாய்க்கான பேரிடர் மீட்பு நிதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுவசதி மற்றும் பொருளாதார மீட்பு மானியங்களாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.