Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள்
பசிபிக் நாடான கிரிபட்டி 2024 ஆம் ஆண்டு புத்தாண்டைக் முதல் நாடாக வரவேற்றுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தீவு, கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் இது, இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு, புத்தாண்டுக்குள் காலடி எடுத்து வைத்தது. இதற்கு அடுத்தபடியாக, நியூசிலாந்திலும் மக்கள் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். இந்திய நேரப்படி சுமார் மாலை 4:30 மணியளவில், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில்(நியூசிலாந்தின் மிக உயரமான கட்டிடம்) ஆயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டாசுகளின் ஒளிகளுக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டைக் கொண்டாடும் உலகின் முதல் பெரிய நகரம் இதுவாகும்.
நியூசிலாந்தை தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் ஆஸ்திரேலியா
அதேபோல் இன்னும் சற்று நேரத்தில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலும் புத்தாண்டு பிறக்க உள்ளது. இங்கு புத்தாண்டை முன்னிட்டு துறைமுக பாலத்தில் நடக்கும் வானவேடிக்கைகளை, உலக அளவில் 425 மில்லியன் மக்கள் கண்டுகளிப்பர். சிட்னியின் கடற்கரையில் நடைபெறும் வானவேடிக்கைகளை பார்க்க, துறைமுக பாலத்தில் 10 லட்சம் பேர்(நகரின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு) அங்கு கூடுவார்கள் என்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவின் டைம் ஸ்கொயர், லண்டன் வீதிகள், மற்றும் பிரான்சிலும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.