H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்
இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயனளிக்கும் ஒரு பைலட் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது. H-1B வெளிநாட்டு வேலை விசாக்களை, தற்போது உள்நாட்டிலேயே, அதாவது அமெரிக்காவிலேயே புதுப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களில் இதுவே முதன்முறையாகும். எனினும் ஒரு குறிப்பிட்ட அளவு நபர்கள் மட்டுமே இந்த புதுப்பித்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 29 அன்று தொடங்கப்பட்ட H1-B பைலட் புதுப்பித்தல் திட்டம் ஏப்ரல் 1 வரை இயங்கும். H-1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் தொழில்களுக்கு, வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் இதையே நம்பியுள்ளன.
புதுப்பிப்பு மேலும் சில தகவல்கள்
உள்நாட்டில் H1-B விசா புதுப்பித்தலுக்கான ஸ்லாட்கள், ஜனவரி-29, பிப்ரவரி-5, பிப்ரவரி-12, பிப்ரவரி-19 மற்றும் பிப்ரவரி-26 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும். H-1B புதுப்பித்தல் திட்டம், தற்போது செல்லுபடியில் உள்ள H-1B விசா வைத்திருப்பவர்களை அமெரிக்காவிலேயே தங்கள் விசாக்களை புதுப்பிக்க அனுமதிக்கும். இந்த பைலட் திட்டம் தன்னார்வத் திட்டம் என்றும், ஒவ்வொரு வாரமும் சுமார் 4,000 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுள் கனடாவில் இருந்து அனுமதிக்கப்பட்ட H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு 2,000 விண்ணப்பங்களும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு 2,000 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. H-1B விசா விண்ணப்பதாரர்கள் போர்டல் மூலமே விண்ணப்பிக்க முடியும். வாராந்திர வரம்பை அடையும் வரை விண்ணப்பங்கள் FDFS அடிப்படையில் கையாளப்படும்.