ஜெர்மனியில் 'ஜென் Z' இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை: ஃபிராங்க்ஃபெர்ட்டில் கடைகள் சூறையாடல்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியில் ராணுவ கட்டாயப் பயிற்சி, கல்வி நிதி வெட்டுக்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக Gen Z regelt என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம், ஃபிராங்க்ஃபெர்ட் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறையாக மாறியது. பெர்லின், ஃபிராங்க்ஃபெர்ட், மூனிச் உள்ளிட்ட 34 நகரங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபிராங்க்ஃபெர்ட் நகர மையப் பகுதியில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் புகுந்து 2 கடையின் கண்ணாடிகளை உடைத்து சூறையாடியதுடன், பல கடைகளைச் சேதப்படுத்தினர். அவசரக் கால மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஃபிராங்க்ஃபெர்ட் நகர மையப் பகுதிக்குப் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் காவலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கைகள்
இளைஞர்களின் முக்கிய கோரிக்கைகள்
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போருக்காகவும் கட்டாயப் பயிற்சிக்காகவும் இளைஞர்களை பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் சீரழிந்து வருவதாகச் சுட்டிக்காட்டும் மாணவர்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகின்றனர்.
பெருநிறுவனங்களின் லாபம் உயர்ந்து வரும் சூழலில், மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்க வேண்டும்.
இப்போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு மற்றும் உள்துறை அமைச்சகம், தீவிர இடதுசாரி அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தீவிரவாதக் குழுக்கள் இப்போராட்டத்தை பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதாக எச்சரித்துள்ளன.