'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரில் இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாகவும் இஸ்ரேலுக்கு உடந்தையாகவும் இருப்பது அமெரிக்கா தான் என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதற்கு எண்ணெய் மற்றும் பொருட்களை இஸ்ரேலுக்கு தராமல் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
காசாவில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க சவுதி அரேபியா நடத்திய அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ரைசி, இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவை கடுமையாக சாடினார்.
அது போக, காசா மீது ஏழு அணுகுண்டுகளுக்கு சமமான வெடிகுண்டு தாக்குதலை இதுவரை இஸ்ரேல் நடாத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுஜே
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மேலும் கூறியதாவது:
இந்தக் குற்றத்திற்கு முக்கியக் குற்றவாளியாகவும் உடந்தையாகவும் அமெரிக்க அரசாங்கம் உள்ளது.
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகளின் புனித வாழ்வைக் காட்டிலும், இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா விரும்புகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தனது பாதுகாப்பு அமைச்சரவையை உடனடியாக அமைத்த அமெரிக்கா, காசாவின் ஆதரவற்ற மக்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேலை ஊக்குவித்தது.
தற்போது,காசா மீதான தாக்குதலை சட்டபூர்வமான தற்பாதுகாப்பு என்றும் அமெரிக்கா அழைக்கிறது.
காசா பகுதியில் நடக்கும் தாக்குதல்கள் கௌரவத்திற்கு தீமைக்கும் இடையிலான மோதலாகும். இந்த போரில் எந்த தரப்பினருக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பதை அனைவரும் தெளிவுபடுத்த வேண்டும்.
காசாவில் நடக்கும் போரை நிறுத்திவிடாமல் தடுத்து, போரை விரிவுபடுத்தும் அமெரிக்காவின் கைகளில்தான் போரின் ஆயுதம் உள்ளது. அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகம் பார்க்க வேண்டும்.