94 விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி! ₹3.25 லட்சம் கோடி ரஃபேல் ஒப்பந்தம்; பிரான்ஸின் மெகா சலுகை பின்னணி
செய்தி முன்னோட்டம்
இந்திய விமானப்படையின் போர்த்திறனைப் பலமடங்கு அதிகரிக்கும் நோக்கில், ₹3.25 லட்சம் கோடி செலவில் 114 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான விரிவான தொழில் நுட்ப மற்றும் வர்த்தக முன்மொழிவை பிரான்ஸ் அரசு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்திய அரசு கடந்த மே மாதம் அனுப்பிய கோரிக்கை கடிதத்திற்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவில், 20 விமானங்கள் பிரான்ஸிலிருந்து நேரடியாகத் தயாரான நிலையில் கொண்டுவரப்பட்டு, மீதமுள்ள 94 விமானங்கள் இந்தியாவிலேயே உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்துக் கூட்டாக உற்பத்தி செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா
'மேக் இன் இந்தியா' திட்டமும் உள்நாட்டுப் பொருளாதார மேம்பாடும்
பிரான்ஸின் முன்னணி ஏரோஸ்பேஸ் நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன், சஃப்ரான், தேல்ஸ் மற்றும் எம்பிடிஏ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் டாடா, எல் & டி போன்ற முன்னணி உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த உற்பத்தித் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
இந்த உள்ளூர் தயாரிப்பு முறையின் மூலம் இந்திய வான்வெளி சார்ந்த உற்பத்தித் துறைக்குப் பெருமளவில் தொழில் வாய்ப்புகள் கிடைப்பதுடன், ₹1.6 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் இந்திய நிறுவனங்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' கொள்கைக்குப் மிகப்பெரிய வலு சேர்க்கும்.
உள்நாட்டு ஏவுகணைகள்
உள்நாட்டு அஸ்த்ரா ஏவுகணைகள் இணைப்பு மற்றும் தீவிர பரிசீலனை
பிரான்ஸ் அளித்துள்ள இந்த ஒப்பந்தப் படிவத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்த்ரா போன்ற உள்நாட்டு வான்வழி ஏவுகணைகளை ரஃபேல் விமானங்களில் இணைக்கும் வசதிகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்து இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
பழைய மிக் வகை விமானங்களின் ஓய்வு மற்றும் எல்சிஏ தேஜஸ் தயாரிப்பில் ஏற்படும் காலதாமதம் காரணமாகக் குறைந்து வரும் விமானப்படையின் படைப்பிரிவு வலிமையை மீட்டெடுக்க இத்தகைய அதிநவீன பலநோக்கு போர் விமானங்கள் இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்றாகும்.
ரஃபேல் விமானங்கள்
200ஐத் தாண்டும் இந்தியாவின் மொத்த ரஃபேல் விமானங்கள்
ஏற்கனவே இந்திய விமானப்படை மற்றும் கடற்படை சார்பில் 62 ரஃபேல் விமானங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த புதிய 114 விமானங்களின் கொள்முதல் உறுதியானால் இந்தியாவின் ரஃபேல் எண்ணிக்கை 176 ஆக உயரும்.
இதுதவிர, இந்திய கடற்படை தனது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களுக்காக மேலும் 31 ரஃபேல்-எம் விமானங்களை கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதால், எதிர்காலத்தில் இந்தியாவில் இயங்கும் மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.