முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருக்கிறாரா? பத்திரிகையாளரின் சர்ச்சை வதந்திக்கு பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக எழுந்த வதந்திகள் குறித்து பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் அளித்த விளக்கமும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அளித்த பதிலும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தானின் GHQ ராணுவத் தலைமையகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சிலர் அளித்த தகவலின் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்ற அச்சத்தை பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் தனது இணைய தொடரில் எழுப்பியிருந்தார். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை உருவாக்கியது.
விளக்கம்
பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கானின் மறுப்பு மற்றும் விளக்கம்
இதனைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவை வெளியிட்ட வஜாஹத் சயீத் கான், இம்ரான் கான் இறந்துவிட்டதாகத் தனது மூலங்கள் உறுதிப்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
ராணுவ அதிகாரிகளின் அச்சத்தையும், அவசியமான ரகசிய காப்பு முறைகளையுமே தான் சுட்டிக்காட்டியதாக கூறிய அவர், இம்ரான் கான் உயிருடன் இருக்கிறார் என்பதை பாகிஸ்தான் அரசு ஆதாரத்துடன் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் குரல் கொடுத்ததாக குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ பதில்
பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பதில்
பத்திரிகையாளரின் இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அமைப்பான ISPR முற்றிலுமாக மறுத்துள்ளது.
இம்ரான் கான் உயிருடன் தான் இருக்கிறார் என்றும், அதியாலா சிறையில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளார் என்றும் ராணுவத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தி பிரிண்ட் செய்தி தெரிவிக்கிறது.
இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் குடும்பத்தினர், சிசிடிவி காட்சி மூலம் இம்ரான் கான் நடந்து செல்வதை கண்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், அவருக்கு கடுமையான ரத்த அழுத்த பிரச்சனை மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்பட்டும் முறையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை என அவரது குடும்பத்தினரும் மனித உரிமைகள் அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.