சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு; வைரலாகும் புகைப்படங்கள்
வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த அதிசய வானிலை மாற்றம் காரணமாக பாலைவன நிலம் முழுவதும் பனிப்பொழிவைக் கண்டது. அதைத் தொடர்ந்து பெருமழை, ஆலங்கட்ட மழை மற்றும் நீர்வீழ்ச்சிகள் இந்த பிராந்தியத்தில் தோன்றின. அல்-ஜவ்ஃப் பாலைவன நிலப்பரப்பை வெள்ளை பனி மூடியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சவுதி பிரஸ் ஏஜென்சியின் கூற்றுப்படி, 'இந்த திடீர் பனிப்பொழிவு, ஒரு வானிலை வடிவத்தின் வளர்ச்சியின் விளைவாகும். அதனால் இது கடுமையான மழையைக் கொண்டு வந்து, வறண்ட பள்ளத்தாக்குகளுக்கு புத்துயிர் அளித்தது'.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
பாலைவன பகுதியில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், எதிர்பாராத வானிலை நிகழ்வுகள் வானிலை ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி ஓமன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையே, ஈரமான காற்றை எடுத்துச் சென்றது, வானிலை நிலைமைகளில் கடுமையான மாற்றத்திற்கு வழிவகுக்கிறது எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கிடையில், இதுபோன்ற வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும், மேலும் மழை, ஆலங்கட்டி, புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சவூதி வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.