ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
உலகில் மிக அரிதாகவே மீன் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 4வது முறையாக மீன் மழை பெய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் தென்மேற்கு கேத்தரின் என்ற பகுதியில் பாலைவன பகுதியின் எல்லை அருகே திடீரென மீன்மழை பொழிந்தது. 1974, 2004, 2010 ஆகிய ஆண்டுகளில் ஏற்கனவே இதே பகுதியில் மீன் மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நிகழ்வு நடந்தது பெரும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. மீன்மழையில் விழுந்த மீன்கள் அனைத்தும் உயிரோடு இருந்ததாகவும், அவற்றை அப்பகுதி மக்கள் வளர்ப்பதற்காக மீன்களை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தொடர்ச்சியாக மீன் மழை
மீன்மழை என்பது மிக அரிதான ஓர் நிகழ்வாகும். கடலில் இருந்தோ, ஆற்றில் இருந்தோ திடீரென மேகங்கள் தண்ணீரை இழுக்கும் போது மீன்களும் சேர்த்து இழுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவை மேகங்களாக மாறி குளிர்ந்த பின்னர் மழையாக பொழியும் போது மீன்களும் மழையுடன் சேர்ந்து வானத்திலிருந்து கீழே விழும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. வானிலை நிபுணர்கள் இது குறித்து ஆய்வு செய்து வந்தனர். தற்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தொடர்ச்சியாக மீன் மழை பொழிவது எப்படி என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.