Loading...
'இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்': புதிய FCRA சட்டத் திருத்த மசோதாவைக் கடுமையாகச் சாடிய அமெரிக்க எம்.பி
புதிய FCRA சட்டத் திருத்த மசோதாவைக் கடுமையாகச் சாடிய அமெரிக்க எம்.பி

'இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்': புதிய FCRA சட்டத் திருத்த மசோதாவைக் கடுமையாகச் சாடிய அமெரிக்க எம்.பி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
08:39 am

செய்தி முன்னோட்டம்

இந்திய நாடாளுமன்றத்தின் பருவக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா 2026 (FCRA) சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள நிலையில், இம்மசோதாவிற்கு அமெரிக்க காங்கிரஸ்காரர் ரைலி மூர் பகிரங்க எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். அமெரிக்கக் காங்கிரஸ்காரர் ரைலி மூர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில், இச்சட்டத் திருத்தம் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினரையும் மதச் தொண்டு நிறுவனங்களையும் நேரடியாக பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். புனித தாமஸ் காலத்திலிருந்தே இந்தியாவில் கிறிஸ்தவ பாரம்பரியம் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு உறவில் பெரும் கவலையை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

முன்மொழிவுகள்

FCRA மசோதாவின் புதிய முன்மொழிவுகள்

வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் 2010-ஆம் ஆண்டின் FCRA சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர இம்மசோதா முயல்கிறது.

இதன்படி, ஒரு தொண்டு நிறுவனத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாவிட்டாலோ, அந்நிதியில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பொறுப்பேற்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரத்யேக அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படும்.

மேலும், கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக வெளிநாட்டு நிதி பெற்ற அமைப்புகளின் பதிவுகள் புதுப்பிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புகள்

எழும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள்

இப்புதிய அதிகாரங்கள் காரணமாக பல தசாப்தங்களாக வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லும் ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

குறிப்பாக கேரளாவில் இயங்கும் பல கல்வி மற்றும் சேவை நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இருப்பினும், வெளிநாட்டு நிதியுதவிகளைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், நிதி முறைகேடுகளைத் தடுக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவுமே இந்தச் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக இந்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT