போர் விமானத்தில் செல்ஃபி மோகம்: நடுவானில் மோதிக்கொண்ட எஃப்-15கே விமானங்கள்; விமானிக்கு அபராதம்
செய்தி முன்னோட்டம்
2021 ஆம் ஆண்டு தென்கொரியாவில் இரண்டு எஃப்-15கே போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்திற்கு, விமானிகளின் கவனக்குறைவான செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கும் செயல்களே காரணம் என்று அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் விளைவாக ஏற்பட்ட 6 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதத்தில், ஒரு பகுதித் தொகையை சம்பந்தப்பட்ட விமானி திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
விபத்து
விபத்திற்கு வழிவகுத்த செல்ஃபி மோகம்
தைகு நகருக்கு அருகில் போர் விமானங்கள் அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த விமானப்படை பிரிவிலிருந்து தான் பணிமாற்றம் பெற்றுச் செல்வதை நினைவுகூரும் வகையில், ஒரு விமானி விமானத்தை விதிகளுக்குப் புறம்பாகக் கடுமையாக உயர்த்தித் திருப்பியுள்ளார். கேமராவில் சிறந்த கோணத்தைப் பிடிக்க அவர் மேற்கொண்ட இந்தத் திட்டமிடப்படாத முயற்சியின்போது, மற்றொரு விமானி முன்னணி ஜெட் விமானத்திலிருந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளார்.
மோதல்
மோதலும் விளைவுகளும்
இரண்டு விமானங்களும் அருகருகே நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக விங்மேன் விமானத்தின் வால் பகுதி, முன்னணி விமானத்தின் இறக்கை மீது மோதியது. இதில் சுமார் 880 மில்லியன் வோன் (600,000 டாலர்) அளவுக்கு விமானங்களுக்குச் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும், விமானிகளின் பொறுப்பற்ற இந்தச் செயலைத் தணிக்கையாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
விமானப்படை
விமானப்படையின் நடவடிக்கை
விபத்திற்கு முதன்மைக் காரணமான அந்த விமானிக்குத் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விமானப் படைப்பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும், சேதமடைந்த தொகையில் பத்தில் ஒரு பகுதியை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. விமானப் பயணத்தின்போது செல்ஃபி மற்றும் வீடியோ எடுப்பது போன்ற செயல்களுக்குத் தகுந்த கட்டுப்பாடுகள் இல்லாததே இத்தகைய விபத்துக்குக் காரணம் எனத் தணிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க விமானப் பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்படும் என்று தென்கொரிய விமானப்படை மன்னிப்பு கோரியுள்ளது.