ஹவாயில் இருக்கும் சொகுசு வீட்டுக்கு தப்பி சென்ற சிலிக்கான் வங்கி CEO
தொழில்நுட்பத் துறையில் பெயர்பெற்று, மூன்று தசாப்தங்களாக இயங்கி வந்த சிலிக்கான் வங்கி, மார்ச் 10, 2023 அன்று திவாலானது. இதில் முதலீடு செய்திருந்தவர்கள் பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். வங்கி மூடப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட $175 பில்லியன் வைப்புத்தொகை தற்போது ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) கட்டுப்பாட்டில் வந்துள்ளது. வங்கியின் சரிவால் ஏற்பட்ட நிதி குழப்பங்களுக்கு மத்தியில், இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஹவாயில் காணப்பட்டார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும், சிலிக்கான் வங்கியின் முன்னாள் CEO கிரெக் பெக்கரும் அவரது மனைவி மர்லின் பாட்டிஸ்டாவும், ஹவாயில் இருக்கும் $3.1 மில்லியன் மதிப்புள்ள தங்கள் சொகுசு வீட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இவருக்கு எதிராக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த தம்பதியினர், திங்கட்கிழமை அன்று சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு தங்கள் சொகுசு காரில் சென்றதாகவும் அங்கிருந்து முதல் வகுப்பு விமானத்தில் ஹவாய் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த முன்னாள் CEO, லஹைனா என்ற பகுதியில் சுற்றி திரிந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஃபெடரல் கட்டுப்பாட்டாளர்களால் SVB மூடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, $3,578,652.31 மதிப்புள்ள பங்குகளை பொது பங்குகளில் விற்றதால், இவருக்கு எதிராக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.