Loading...
வரலாற்றில் முதன்முறையாக ஸ்பெயினில் தேசிய அவசரநிலை! 63,000 பேரை படகுகளில் மீட்ட பிரான்ஸ்; காரணம் என்ன?
ஐரோப்பாவில் காட்டுத்தீ தீவிரம்

வரலாற்றில் முதன்முறையாக ஸ்பெயினில் தேசிய அவசரநிலை! 63,000 பேரை படகுகளில் மீட்ட பிரான்ஸ்; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
07:23 pm

செய்தி முன்னோட்டம்

ஐரோப்பிய கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாகப் பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மார்ட்ரிட்டின் மேற்கு மலைப் பகுதிகளில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி பரவி வருவதால், தனது வரலாற்றிலேயே முதன்முறையாகக் காட்டுத்தீ பேரிடருக்காக ஸ்பெயின் அரசு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது. காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருவதுடன், மணிக்கு மணி காற்றின் திசையும் மாறுவது அங்கு பெருஞ்சவாலாக மாறியுள்ளது.

பிரான்ஸ்

பிரான்ஸில் 63,000 பேர் படகுகள் மூலம் மீட்பு

மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கேப் ஃபெரெட் சுற்றுலா பகுதியில் காட்டுத்தீ வீடுகளை நெருங்கியதால், அங்கிருந்து சுமார் 63,000 மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சாலை வழிகள் புகையால் மூடப்பட்டதால், பல ஆயிரம் மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுவரை 10,000 ஹெக்டேர் நிலப்பரப்பு சாம்பலாகியுள்ளதுடன், 80-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

நிலைமையைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியைக் கோரியுள்ளது.

ஸ்பெயின்

ஸ்பெயினில் 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஸ்பெயினின் அவிலா மாகாணம் மற்றும் அதை ஒட்டியுள்ள அடர்ந்த குடியிருப்புப் பகுதிகளில் பரவி வரும் மூன்று வெவ்வேறு காட்டுத்தீ ஒன்றிணைவதைக் தடுக்க 270க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், ராணுவத்தின் சிறப்புப் படைகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன.

அங்குள்ள நகரங்களில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டில் மட்டும் ஸ்பெயினில் 29 பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகம் என சுற்றுச்சூழல் அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அச்சுறுத்தல்

அணு உலைகள் மற்றும் விவசாயப் பயிர்களுக்கு அச்சுறுத்தல்

தொடர் வெப்ப அலை காரணமாக பிரான்ஸின் ஆறுகளில் நீரின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் அணு உலைகளைக் குளிர்விக்கும் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின்படி அணுமின் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள கோல்ஃபெச் 2 அணு உலை ஜூலை 7 முதல் மூடப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தானிய உற்பத்தியாளரான பிரான்ஸில், பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்பத்தால் மக்காச்சோள பயிர்கள் கருகி விவசாயத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐரோப்பிய நாடுகள்

சர்வதேச உதவியை நாடும் ஐரோப்பிய நாடுகள்

பிரான்ஸ் அதிபர் எமானுவல் மேக்ரான், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சிறப்புத் தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவுமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த வாரத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், காட்டுத்தீ மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுமே ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுப் பேரிடர் மீட்புக் குழுவின் உதவியுடன் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

ADVERTISEMENT