Loading...
வறட்சியால் கருகிய பயிர்கள்! இங்கிலாந்து விவசாயிகளுக்கு 65 மில்லியன் பவுண்ட் உதவித் தொகை அறிவிப்பு
விவசாயிகளுக்கு 65 மில்லியன் பவுண்ட் நிவாரணம் அறிவிப்பு

வறட்சியால் கருகிய பயிர்கள்! இங்கிலாந்து விவசாயிகளுக்கு 65 மில்லியன் பவுண்ட் உதவித் தொகை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 16, 2026
08:06 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்து முழுவதும் நிலவி வரும் தொடர் வெப்ப அலை மற்றும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் 65 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான) அவசரகால நிதி உதவியை அரசு அறிவித்துள்ளது. அவசர அமைச்சரவைக் குழுக்கூட்டத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரடியாக சந்தித்த பின்னரே இந்த உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளைத் தனியாக விட முடியாது என்றும், உணவு உற்பத்தியைப் பாதுகாப்பது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள்

வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண திட்டத்தில், 2026 ஆம் ஆண்டிற்கான நிலையான விவசாய ஊக்குவிப்பு திட்டத்திற்குக் கூடுதலாக 50 மில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இத்திட்டத்தின் மொத்த பட்ஜெட் 290 மில்லியன் பவுண்டாக உயர்ந்துள்ளது.

இது தவிர, விவசாயிகள் தங்களின் சொந்தப் பண்ணைகளில் நீர் சேமிப்பு நீர்த்தேக்கங்களைக் கட்டுவதற்கு உதவ மேலும் 15 மில்லியன் பவுண்ட் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரங்களை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் திட்டமிடல் விதிகளிலும் தளர்வுகள் கொண்டுவரப்பட உள்ளன.

முன்னெச்சரிக்கை

காட்டுத்தீ அபாய எச்சரிக்கை மற்றும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வரும் சூழலில், மக்கள் தங்களின் மொபைல் போன்களுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அரசு அனுப்பியுள்ளது.

திறந்தவெளிகளில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தக் வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைப் போல இங்கிலாந்திலும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்பு விமானங்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தீவிர இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள 100 மில்லியன் பவுண்ட் கூடுதல் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதிப்பு

38 டிகிரி செல்சியஸ் வெப்பமும் போக்குவரத்துப் பாதிப்புகளும்

இங்கிலாந்தில் இந்த கோடைகாலத்தில் நிலவும் 5வது வெப்ப அலை இதுவாகும்.

சில பகுதிகளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளதால் நாட்டின் உட்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்களில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக 24 மணி நேரத்திற்குள் இரண்டு ரயில்கள் தடம் புரண்டதை அடுத்து ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

தற்போதைக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரிய ஆபத்து இல்லை என்றாலும், எதிர்கால வறட்சியை எதிர்கொள்ள புதிதாக 9 பிரம்மாண்ட நீர்த்தேக்கங்களைக் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விவசாயிகளின் எதிர்காலம்

விவசாயிகளின் எதிர்காலப் பாதுகாப்பிற்கான அரசின் உறுதியளிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்து சந்திக்கும் 3வது கடுமையான வறட்சி இதுவாகும்.

இதனால் விளைச்சல் குறைந்து, செலவுகள் அதிகரித்து இங்கிலாந்து விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

மழை பெய்ய வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில், உடனடி நிதியுதவியோடு மட்டுமல்லாமல் நீண்டகால வறட்சி மேலாண்மைத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய விவசாய முறைகளை ஊக்குவிக்கப் பண்ணை வழிகாட்டி வரைபடங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT