Loading...
அமெரிக்க இடைத்தேர்தல்: குடியரசு கட்சிக்கு எலான் மஸ்க் ரூ.34,976 கோடி நிதியுதவி
குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக எலான் மஸ்க் 366 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்

அமெரிக்க இடைத்தேர்தல்: குடியரசு கட்சிக்கு எலான் மஸ்க் ரூ.34,976 கோடி நிதியுதவி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
09:58 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் வரவிருக்கும் நவம்பர் 3 இடைத்தேர்தலை முன்னிட்டு, குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக உலகக் கோடீஸ்வரரான எலான் மஸ்க் இதுவரை இல்லாத அளவில் 366 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.34,976 கோடி) நிதியுதவியாக வழங்கி மிகப்பெரிய நன்கொடையாளராக உருவெடுத்துள்ளார். கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு மட்டும் எலான் மஸ்க் சுமார் 276 மில்லியன் டாலர்களை (ரூ.26,343 கோடி) குடியரசுக் கட்சி அமைப்புகளுக்கும், தனது சொந்த அரசியல் நடவடிக்கை குழுவிற்கும் வழங்கியுள்ளார்.

நிதிப் பங்களிப்பு

எலான் மஸ்க்கின் நிதிப் பங்களிப்பு விவரங்கள்

குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களை ஆதரிக்கும் குழுவிற்கு $158 மில்லியன் (ரூ.15,103 கோடி) வழங்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் சொந்த அரசியல் குழுவிற்கு $76 மில்லியன் (ரூ.7,265 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் சபை வேட்பாளர்களுக்காக $20 மில்லியன் (ரூ.1,912 கோடி) வழங்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ச்டனின் செனட் பிரச்சாரத்தை ஆதரிக்கும் லோன் ஸ்டார் லிபர்ட்டி PAC-க்கு $10 மில்லியன் (ரூ.956 கோடி) வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு ஆளுநர்கள் சங்கத்திற்கு $10 மில்லியன் மற்றும் அட்டர்னி ஜெனரல் சங்கத்திற்கு $2 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

டிரம்ப்

டிரம்ப் உடனான பிணக்கம் மற்றும் சமரசம்

2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு சுமார் $290 மில்லியன் செலவிட்ட மஸ்க், பின்னர் DOGE துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஆனால், உள்நாட்டுக் கொள்கைச் சட்டங்கள் தொடர்பாக ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.

இருப்பினும், சமீபத்தில் இருவரும் சமரசமடைந்த நிலையில், அமெரிக்க அரசு சார்பாக மஸ்க்கிற்கு 'தேசிய அறிவியல் பதக்கத்தை' ட்ரம்ப் வழங்கி கௌரவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகியவற்றின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ஜனநாயகக் கட்சி தீவிரமாக முயன்று வருகிறது.

பணவீக்கம் மற்றும் ஈரான் போர் பதற்றங்களால் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை எதிர்கொள்ளும் குடியரசுக் கட்சிக்கு, மஸ்க்கின் இந்த பிரம்மாண்ட நிதி உதவி பெரும் பொருளாதார வலிமையை அளித்துள்ளது.

ADVERTISEMENT