கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் எலான் மஸ்க்கை கொல்ல முயன்றதாக தகவல்
டெஸ்லாவின் கோடீஸ்வர தலைமை நிர்வாக அதிகாரியும், சமூக ஊடக தளமான X இன் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த எட்டு மாதங்களில் தன்னை கொல்வதற்கு இரண்டு முயற்சிகள் நடந்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், இது குறித்து ஒரு பயனர் எலான் மஸ்க்கின் பதிவில் கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்டில், "தயவு செய்து உங்கள் பாதுகாப்பை மும்மடங்காக்குங்கள். அவர்கள் டிரம்பை குறி வைக்கிறார்கள் என்றால், உங்களையும் அவர்களால் நெருங்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்று முன்பு கூறிய எலான் மஸ்க்
"இனி வருவது ஆபத்தான காலங்களே. கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர்(தனியான சந்தர்ப்பங்கள்) ஏற்கனவே என்னைக் கொல்ல முயன்றுள்ளனர். அவர்கள் டெக்சாஸில் உள்ள டெஸ்லா தலைமையகத்தில் இருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்." என்று எலான் மஸ்க் அந்த கமெண்ட்டுக்கு பதிலளித்துள்ளார். எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்று மஸ்க் முன்பு கூறியிருந்தார். 2022 ஆம் ஆண்டில், சில தொழில்நுட்ப நிருபர்கள் தனது நிகழ்நேர இருப்பிடத்தைப் பகிர்ந்ததாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். எலான் மஸ்க்கின் தனிப்பட்ட ஜெட் தற்போது எங்கிருக்கிறது என்பதை காட்டும் ஒரு கணக்கை தொழில்நுட்ப நிருபர்கள் உருவாக்கினார். அந்த கணக்கு தற்போது நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது