தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
ஜப்பானின் ஃபுகுஷிமா பிராந்தியத்தில் உள்ள ஹோன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக தைவானைத் தாக்கிய 7.4 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஜப்பானை தாக்கியுள்ளது நிலநடுக்கம். இன்று காலை புகுஷிமா பகுதியில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில், 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 32 கிலோமீட்டர் (19.88 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.
புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு எந்த சேதமும் இல்லை
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடந்த 25 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜப்பானின் யோனகுனி தீவில் நேற்று சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், ஜப்பானில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, புதிய சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தின் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. எனினும் அதன் அதிர்வு தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது. புகுஷிமா அணுமின் நிலையத்தின் ஆபரேட்டர் டெப்கோ, "எந்தவிதமான அசாதாரணங்களும்" கண்டறியப்படவில்லை என்று கூறியதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.