துபாயில் 'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் அமல்: பூங்காவில் அமர்ந்து ஆபீஸ் வேலை பார்க்கும் புதுமை
செய்தி முன்னோட்டம்
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகெங்கும் டிரெண்டான 'ஒர்க் பிரம் ஹோம்' முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, 'ஒர்க் பிரம் பார்க்' என்ற புதுமையான திட்டத்தை துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்காமல், பசுமையான பூங்காவில் குளத்தின் அழகை ரசித்தவாறு மேஜை மற்றும் நாற்காலிகளைப் பயன்படுத்தி பணிபுரியும் வகையில் அல் பர்ஷா குளப் பூங்காவில் இந்த பிரம்மாண்ட வசதி முதல்முறையாக தொடங்கப்பட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாடகை
இலவச வைபை முதல் பிரத்யேக அறைகள் வரை
காலை 8 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் இந்த வெளிப்புற அலுவலகத்தில் 30 பேர் வரை முற்றிலும் இலவசமாகப் பணியாற்றலாம்.
அமைதியான தனி அறைகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 திர்ஹாம் கட்டணத்தில் அதிவேக வைபை மற்றும் இலவச காபி வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், குழுவாகப் பணியாற்ற 9 பேர் அமரக்கூடிய பெரிய அறைகளும் மணி நேர வாடகையில் கிடைக்கின்றன.
நிறுவனங்கள் நீண்ட மாத ஒப்பந்த அடிப்படையிலும் இவற்றை வாடகைக்கு எடுக்கலாம்.
பெற்றோர் குழந்தைகளைப் பூங்காவில் விளையாட விட்டுவிட்டு எவ்வித பதற்றமும் இன்றி அலுவலகப் பணிகளைக் கவனிக்கலாம் என்பது இதன் சிறப்பு.
வெயிலைச் சமாளிக்க நவீன குளிரூட்டும் வசதிகள் அமைப்பது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு
முன்பதிவு மற்றும் விரிவாக்க திட்டம்
பொதுப் பூங்காக்களை பல்நோக்கு சமூக வாழ்விடங்களாக மேம்படுத்தும் துபாய் மாநகராட்சியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இத்திட்டம் களமிறக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் Letswork இணையதளம், அதன் செயலி அல்லது 04 581 3652 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் வழியாக தங்களது இடங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் வரவேற்பை ஆய்வு செய்த பின்னர், துபாயிலுள்ள மற்ற முக்கியப் பூங்காக்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.