2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால், இந்தியாவுக்கு பரஸ்பர வரி அதிகரிக்கப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில அமெரிக்க தயாரிப்புகளுக்கு, குறிப்பாக ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு, இந்தியா அதிக வரி விதித்துள்ளதாக கூறிய அவர், தான் மீண்டும் அமெரிக்க அதிபரானால், இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதிக்கிறதோ அதே அளவு இந்தியாவுக்கும் வரி உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். முன்பு அமெரிக்க அதிபராக அவர் இருந்த போது, "கட்டண ராஜா" என்று இந்தியாவை பல முறை விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவிற்கு சமமான வரிகள் விதிக்கப்படும்": டொனால்ட் டிரம்ப்
மேலும், இந்தியாவின் சந்தைகளுக்கு சமமான மற்றும் நியாயமான அணுகல் அமெரிக்காவிற்கு வழங்கப்படவில்லை என்று 2019ஆம் ஆண்டு மே மாதம் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் வரி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். "வரிகள் வசூலிக்கப்படுவது சமமாக இருக்க வேண்டும். இந்தியா அதிக சுங்க வரிகளை வசூலித்து வருகிறது. ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களில் அதை நாம் தெளிவாக பார்க்கலாம். அவர்கள் 100 சதவிகிதம், 150 சதவிகிதம் மற்றும் 200 சதவிகிதம் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இந்தியா அமெரிக்காவிடம் 200 சதவீதம் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்கா எதுவும் வசூலிக்கவில்லை." என்று அவர் கூறியுள்ளார்.