ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ட்ரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு இரகசிய அரசாங்க ஆவணங்களை தனது புளோரிடா வீட்டில் வைத்திருந்ததாக ஃபெடரல் கிராண்ட் ஜூரி அவர் மீது குற்றஞ்சாட்டி உள்ளது. இரகசிய அரசாங்க ஆவணங்களை கையாடல் செய்ததற்காகவும், பொய்யான அறிக்கைகளை அளித்தற்காகவும், இதையெல்லாம் மறைக்க சதி செய்தததற்காகவும் அவர் மீது 7 குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவார். இந்நிலையில் அவர் மீது இரண்டாவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க நீதித்துறையால் தொடரப்பட்ட இந்த கிரிமினல் வழக்கு, முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஒரு பெரும் சரிவாகும். இந்த வழக்கு விசாரணைக்காக டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டிரம்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பது இன்னும் தெரியவரவில்லை. அதில் என்ன இருக்கிறது என்பதை டிரம்ப் கூட இதுவரை பார்க்கவில்லை. மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் செவ்வாயன்று தெரிவித்தார். டிரம்ப் ஏற்கனவே நியூயார்க்கில் ஒரு கிரிமினல் வழக்கை எதிர்கொள்கிறார். அந்த வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.