அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்- எலான் மஸ்க் நேர்காணல்: எங்கே எப்படி பார்க்கலாம்?
கோடீஸ்வரர் எலான் மஸ்க் திங்களன்று, முன்னாள் அமெரிக்க அதிபரும், இந்தாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்புடனான நேர்காணலுக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இவர்களின் நேர்காணல் X Spaces தளத்தில் நேரலையாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை படி, அமெரிக்க நேரப்படி, நாளை ஆகஸ்ட் 12 இரவு 8 மணிக்கு நடைபெறும். இந்திய நேரப்படி அது நாளை அதிகாலை 5:30 மணி அளவில் காணலாம். இதற்கு முன்னதாக எலான் மஸ்க் நேர்காணலை முன்னிட்டு இன்றிரவு சில "சிஸ்டம் ஸ்கேலிங் சோதனை" செய்வதாகவும் கூறினார்.
டிரம்ப்- மஸ்க் நேர்காணல்
எலான் மஸ்க், தீவிர டிரம்ப் ஆதரவாளர்
முன்னணி நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸுக்கு பெயர் பெற்ற கோடீஸ்வரர் எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டிரம்பின் பிரச்சாரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சூப்பர் பிஏசிக்கு மாதந்தோறும் 45 மில்லியன் டாலர்களை வழங்க மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எலான் மஸ்க் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளார். அமெரிக்காவின் தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி, ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவளிக்க சூப்பர் பிஏசிக்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரம்பற்ற நன்கொடைகளை ஏற்கலாம். மஸ்க், ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் என்பதற்கு ஒரு சான்று: சமூக ஊடக தளமான ட்விட்டரை மஸ்க் வாங்கியதும், தடை செய்யப்பட்டிருந்த டொனால்ட் டிரம்பின் கணக்கினை உடனடியாக மீட்டெடுத்தது.