Loading...
சாம் ஆல்ட்மேனுக்கு புதிய சிக்கல்! லாபத்திற்கு முன்னுரிமை, குழந்தைகளுக்கு ஆபத்து; ஓபன்ஏஐ மீது 8 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு
ஓபன்ஏஐ மீது 8 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு

சாம் ஆல்ட்மேனுக்கு புதிய சிக்கல்! லாபத்திற்கு முன்னுரிமை, குழந்தைகளுக்கு ஆபத்து; ஓபன்ஏஐ மீது 8 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
11:10 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனம், பாதுகாப்பை விட தனது வணிக லாபத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் கூறி அமெரிக்காவின் 8 மாநிலங்கள் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்நதுள்ளன. ஐயோவா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மேற்கு விர்ஜீனியா, அர்கான்சாஸ், அரிசோனா, இடாஹோ மற்றும் மொன்டானா ஆகிய மாநிலங்களின் அட்டர்னி ஜெனரல்கள் அக்டோபர் 14, 2026 அன்று இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சாட்ஜிபிடி தளத்தின் பாதுகாப்பு குறித்து ஓபன்ஏஐ பொய்யான தகவல்களைத் தெரிவித்து பயனர்களை ஏமாற்றியதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபத்துகள்

சிறுவர்கள் மற்றும் பயனர்களுக்கு ஏற்படும் மனரீதியான ஆபத்துகள்

சாட்ஜிபிடி தளம் பயனர்களை ஈர்க்கும் வகையிலும் அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையிலும் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்த மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனால் குழந்தைகள் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட பயனர்கள் தவறான எண்ணங்கள், ஆபத்தான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

மேலும், முறையற்ற வகையில் சாட்ஜிபிடி மூலம் உந்தப்பட்டுச் சிலர் தற்கொலை மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக ஏற்கனவே தொடரப்பட்ட பிற வழக்குகளையும் இந்த மாநிலங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இத்தகைய செயல்பாடுகள் பயனர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

விதி மீறல்

சிறுவர்களின் தரவுத் திருட்டு மற்றும் பயனர் விதிகள் மீறல்

பயனர்களின் மனநலப் பாதிப்புகள் தவிர, சிறுவர்களின் தனிப்பட்ட தரவுகளை உரிய பாதுகாப்பு விதிகளின்றி ஓபன்ஏஐ சேகரித்துள்ளதாகவும் மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சிறுவர்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவதைத் தடுக்கப் போதுமான வயதுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கத் தவறிவிட்டது.

அரிசோனா மாநிலத்தின் வழக்கறிஞர் குறிப்பிடுகையில், ஓபன்ஏஐ தனது தொடக்ககால பொதுநல நோக்கத்தை மறந்து முற்றிலும் வணிகப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்றார்.

இதனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக மாநிலங்கள் வாதிடுகின்றன.

ADVERTISEMENT

ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ நிறுவனத்தின் விளக்கம் மற்றும் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கை

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ஓபன்ஏஐ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ட்ரூ புசேடரி, வயதுக் கட்டுப்பாடுகள் மற்றும் பெற்றோர் கண்காணிப்பு வசதிகளைத் தங்களது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஏஐ அமைப்பும் முழுமையானது அல்ல என்றும், பாதுகாப்பை மேம்படுத்தத் தொடர்ந்து நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குகளின் மூலம் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கவும், சிறுவர்களின் தரவுகளை நீக்கவும், பாதுகாப்பற்ற ஏஐ மாடல்களின் உருவாக்கத்தைத் தடுக்கவும் அமெரிக்க மாநிலங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.

ADVERTISEMENT