LOADING...
ஈரான் -சீனா ரகசிய செயற்கைக்கோள் ஒப்பந்தம்: அமெரிக்க ராணுவ தளங்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதா 'TEE-01B'?
இந்த செய்திகளை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது

ஈரான் -சீனா ரகசிய செயற்கைக்கோள் ஒப்பந்தம்: அமெரிக்க ராணுவ தளங்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதா 'TEE-01B'?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 15, 2026
02:03 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உச்சத்தில் இருந்தபோது, ஈரான் ரகசியமாகச் சீனாவிலிருந்து ஒரு உளவு செயற்கைக்கோளை பெற்று, அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை கண்காணித்ததாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது. கசிந்த ஈரானிய ராணுவ ஆவணங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC), சீன நிறுவனமான 'Earth Eye Co. தயாரித்த TEE-01B என்ற செயற்கைக்கோளை 2024-ன் இறுதியில் ரகசியமாகப் பெற்றுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் சுமார் அரை மீட்டர் வரையிலான துல்லியமான படங்களை(0.5m resolution) எடுக்கும் திறன் கொண்டது. இதன்மூலம் விமானப்படை தளங்களில் உள்ள விமானங்கள் மற்றும் வாகனங்களை ஈரானால் துல்லியமாக கண்காணிக்க முடிந்தது என அந்த செய்தி கூறுகிறது.

கண்காணிப்பு

கண்காணிக்கப்பட்ட அமெரிக்க தளங்கள்

இந்தச் செயற்கைக்கோள் மூலம் சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ நிலைகளை ஈரான் கண்காணித்துள்ளது. சவூதி அரேபியா: மார்ச் 13 முதல் 15 வரை 'பிரின்ஸ் சுல்தான்' விமானப்படை தளத்தை இந்தச் செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. மார்ச் 14- அன்று அங்கு அமெரிக்க விமானங்கள் தாக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜோர்டான்: முவாஃபக் சால்டி விமானப்படை தளம் கண்காணிக்கப்பட்டது. பஹ்ரைன்: அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் அமைந்துள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டன. ஈராக்: எர்பில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.

பதில்

சீனாவின் ஒத்துழைப்பு மற்றும் மறுப்பு

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட எம்போசாட் என்ற வணிக ரீதியான நிலத்தடி நிலையங்களின் அணுகலை ஐஆர்ஜிசி (IRGC) பயன்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் ஈரானிய ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு பிறகும், சீனாவிலுள்ள நிலையங்கள் வழியாக ஈரானால் இந்த செயற்கைக்கோளை தொடர்ந்து இயக்க முடிந்தது. இருப்பினும், இந்த செய்திகளை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. இது "முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட செய்தி" என்றும், சீனா ராணுவத் தளவாட ஏற்றுமதியில் எப்போதும் பொறுப்புடன் செயல்படுவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி அமெரிக்கா, சீனா மீது புதிய வர்த்தக வரிகளை விதித்தால், அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பெய்ஜிங் எச்சரித்துள்ளது.

Advertisement