பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்று செக் குடியரசில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூயார்க்கில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாக அமெரிக்க வழக்கறிஞர்கள், குப்தா மீது குற்றம் சாட்டியுள்ளனர். நிகில் குப்தாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் அனைத்து தீர்ப்புகளும் வழங்கப்பட்ட பிறகு செக் நீதித்துறை அமைச்சர் பாவெல் பிளாசெக் இதற்கான இறுதி முடிவை எடுப்பார். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் குப்தா கடந்த ஆண்டு ஜூன் மாதம் செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, அவர் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாக அமெரிக்கா அவர் மீது குற்றம் சாட்டியது.
"அனைத்து ஆவணங்களும் நீதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும்": விளாடிமிர் ரெப்கா
மேலும், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்காக இந்திய அரசாங்கம் நிகில் குப்தாவை அமெரிக்காவில் பணியமர்த்தியது என்று அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய செக் நீதித்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விளாடிமிர் ரெப்கா, "நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்ட பிறகு, வழக்கில் உள்ள அனைத்து ஆவணங்களும் நீதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும்" என்று கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தாவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதா வேண்டாமா என்பதை நீதி அமைச்சர் பிளேசெக் முடிவு செய்வார் என்று ரெப்கா மேலும் கூறியுள்ளார்.