
தவளையை உயிரோடு விழுங்கினால் முதுகுவலி சரியாகி விடும்? 8 தவளைகளை விழுங்கிய பாட்டிக்கு நேர்ந்த சோகம்
செய்தி முன்னோட்டம்
சீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் முதுகு வலியைப் போக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோ மருத்துவமனையில் 82 வயதான சாங் என்ற அந்த மூதாட்டி, கடும் வயிற்று வலியுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தாரிடம் இருந்து தகவலை அறிந்த மருத்துவர்கள், அவர் மூன்று தவளைகளை முதல் நாளும், ஐந்து தவளைகளை அடுத்த நாளும் என விழுங்கியதை உறுதி செய்தனர். ஆரம்பத்தில் சிறிய அசௌகரியம் மட்டுமே இருந்த நிலையில், வலி மோசமடைந்ததால் அவரால் நடக்கவே முடியவில்லை.
தொற்று
ஒட்டுண்ணித்த தொற்று
ஜெஜியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனைகளில், அவர் உடலில் ஸ்பார்கனம் (sparganum) உள்ளிட்ட ஒட்டுண்ணித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உயிருள்ள தவளைகளை விழுங்கியது அவரின் செரிமான அமைப்பைச் சேதப்படுத்தியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சீனாவில் முதியோர் மத்தியில் இது போன்ற ஆதாரம் இல்லாத நாட்டுப்புற வைத்திய முறைகளைப் பின்பற்றுவது வழக்கமாக இருப்பதாக மூத்த மருத்துவர் வூ சோங்வென் கூறினார்.
மூட நம்பிக்கைகள்
சீனாவில் மூட நம்பிக்கை வைத்திய முறைகள்
இது மட்டுமல்லாது, தவளைத் தோலை தோல் நோய்களுக்குப் பூசுவது அல்லது பச்சையான பாம்பு அல்லது மீன் பித்தப்பைகளை உட்கொள்வது போன்ற அபாயகரமான செயல்களை உள்ளூர் நாட்டுப்புற வைத்திய முறைகளாக பின்பற்றுவது சீனாவில் வயதானவர்களிடையே இன்னும் தொடர்கிறது. இதுபோன்ற செயல்கள் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைய வழிவகுக்கும் என்றும், இதனால் பார்வைக் குறைபாடு, மூளையில் தொற்று மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என்று மருத்துவர் வூ சோங்வென் எச்சரித்தார். இதற்கிடையே, இரண்டு வாரச் சிகிச்சைக்குப் பிறகு சாங் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுபோன்ற ஆபத்தான நாட்டுப்புற வைத்தியங்களை நம்பாமல், மருத்துவ ஆலோசனை பெற அவர் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.