சீனாவின் திபெத் பகுதியில் ரிக்டர் 7.0 நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு, 300 வீடுகள் இடிந்து சேதம்
செய்தி முன்னோட்டம்
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரசு ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. திபெத்தின் நாக்கு (Nagqu) நகருக்கு கிழக்கே உயர்மலை நாக் பகுதியில் 11 மைல் ஆழத்தில் வியாழக்கிழமை இரவு 10:33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.
அவசர நிலை
மீட்புப் பணிகள் மற்றும் அவசர நிலை அறிவிப்பு
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக்கொண்டு தெருக்களிலும் வாகனங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிய அளவிலான பல தொடர் அதிர்வுகளும் பதிவாகின.
சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், அப்பகுதி வழியிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சீன நிலநடுக்க நிர்வாகம் 2-ஆம் கட்ட அவசரக்கால மீட்பு நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
இந்திய மற்றும் யூரேசிய நிலத்தட்டுக்கள் சந்திக்கும் பகுதியில் திபெத் பீடபூமி அமைந்திருப்பதால், இங்கு தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.