LOADING...
ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும்; பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பலே திட்டம்
ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும் என சீனா அறிவிப்பு

ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும்; பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பலே திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 12, 2025
08:50 am

செய்தி முன்னோட்டம்

பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சீனா, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முதன்முறையாகக் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்கள் மீது வரி விதிக்க ஆலோசித்து வருகிறது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் கருத்தடைச் சாதனங்களுக்கான வரி விலக்கு நீக்கப்படலாம் என புதிய சட்டம் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் பின்வருமாறு:-

பின்னணி

13% வரி விதிப்பு மற்றும் அதன் பின்னணி

புதிய சட்டத்தின்படி, ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் வழக்கமான 13% மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும். கடந்த பல பத்தாண்டுகளாகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட 'ஒரு குழந்தை கொள்கைக்குப்' பிறகு, நாட்டின் மக்கள் தொகை உச்சத்தை எட்டி, பின்னர் சரியத் தொடங்கியுள்ளது. இது சீனாவை மக்கள் தொகை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. இந்தக் குறைவைச் சரிக்கட்டவே, மக்களை அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2015இல் குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என கொள்கை தளர்த்தப்பட்டது. மக்கள் தொகைச் சரிவைத் தொடர்ந்து, 2021இல் அது மூன்று குழந்தைகளாக மேலும் தளர்த்தப்பட்டது.

கவலை

நிபுணர்களின் கவலை மற்றும் பொது விவாதம்

இந்த வரி விதிப்பு குறித்துச் சீன சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக விலை உயர்த்தப்பட்டாலும் ஆணுறை வாங்குவதை விடக் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகவே இருக்கும் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர். மேலும், கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது, மக்களைத் திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பல தசாப்தங்களாக, சீனா அரசாங்கம் கருத்தடைச் சாதனங்களை இலவசமாக அல்லது எளிதில் கிடைக்கச் செய்வதை ஊக்குவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மக்கள் தொகை

பிறப்பு விகிதம் மூன்று மடங்கு குறைவு 

தேசிய புள்ளியியல் பணியகத்தின்படி, 2024இல் சீனாவில் 9.5 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்தனர். இது 2019 ஆம் ஆண்டின் பிறப்பு எண்ணிக்கையான 14.7 மில்லியனை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாகும். இறப்புகளின் எண்ணிக்கை பிறப்புகளை விட அதிகமாக இருந்ததால், 2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை முந்தி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியது.

Advertisement