பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் கனடா நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. இந்திய அரசால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒரு காலிஸ்தான்-சீக்கிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் குருத்வாராவுக்கு வெளியே அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காலிஸ்தான் புலிப் படையின்(கேடிஎஃப்) தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். கரண் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் உட்பட நான்கு இந்தியர்கள் நிஜ்ஜாரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மீண்டும் சிதையுமா?
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக ஒரு பெரும் குற்றச்சாட்டை கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு முன்வைத்தது. அதில் இருந்து இந்திய-கனேடிய இரு நாட்டு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், இத்தாலியில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டின் போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பேசிய ட்ரூடோ, பொருளாதார உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட உறவுகள் வலுக்க "வாய்ப்பு" இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய பயங்கரவாதியான நிஜ்ஜாருக்கு கனேடிய அரசாங்கம் மரியாதை செலுத்தி இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான சண்டையை மீண்டும் தூண்டி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.