LOADING...
கனடா கனவில் இருக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிஆர் விதிகளில் அதிரடி மாற்றம் செய்த மேனிடோபா மாகாணம்
கனடா பிஆர் விதிகளில் மாற்றம் செய்த மேனிடோபா மாகாணம்

கனடா கனவில் இருக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிஆர் விதிகளில் அதிரடி மாற்றம் செய்த மேனிடோபா மாகாணம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2026
04:02 pm

செய்தி முன்னோட்டம்

கனடா நாட்டில் தங்கிப் படித்துவிட்டு அங்கேயே நிரந்தரக் குடியுரிமை பெறத் திட்டமிடும் இந்திய மாணவர்களுக்கும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குடியேற்ற ஆர்வலர்களுக்கும் மிகக் கடுமையான அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவின் ஆறாவது பெரிய மாகாணமான மேனிடோபா, வெளிநாட்டு பட்டதாரிகள் படிப்பை முடித்தவுடன் மிக எளிதாகப் பிஆர் பெறுவதற்காகப் பயன்படுத்தி வந்த கேரியர் எம்ப்ளாய்மென்ட் பாத்வே என்ற பிரபலமான திட்டத்தை ஜூன் 11 முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முழுமையாக ரத்து செய்துள்ளது. கல்வித் தகுதியை விடவும், கனடா நாட்டின் தற்போதைய தொழிலாளர் சந்தைத் தேவை மற்றும் நேரடி வேலை அனுபவத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியேற்றத்தில் சரிவு

இந்திய மாணவர்களின் கனவு கோட்டையான வின்னிபெக் நகர குடியேற்றத்தில் சரிவு

குறைந்த வாழ்க்கைச் செலவு மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான யுனிவர்சிட்டி ஆஃப் மேனிடோபா மற்றும் ஆர்ஆர்சி பாலிடெக் போன்றவற்றின் காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மாகாணத்தின் தலைநகரான வின்னிபெக் நகரைத் தங்களின் முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுத்து வந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த மாகாணத்தில் பிஆர் பெற்ற ஒட்டுமொத்தப் புதிய குடியேற்றவாசிகளில் 33.1 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியப் பின்னணி கொண்டவர்கள் ஆவர். தற்பொழுது கல்வி முடித்தவுடன் நேரடியாக பிஆர் தரும் சிஇபி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மற்றும் புதிய விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்துப் பெரும் கவலையடைந்துள்ளனர்.

புதிய திட்டம்

புதிய ஸ்கில்டு ஒர்க்கர் இன் மேனிடோபா திட்டம் அறிமுகம்

முன்பு நடைமுறையில் இருந்த சிஇபி திட்டத்தின் கீழ், ஒரு வருடப் படிப்பை முடித்துவிட்டு மேனிடோபாவின் தேவைப் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு வேலை ஒப்பந்தக் கடிதத்தைக் காட்டினாலே பிஆர் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது இந்த எளிமையான வழித்தடம் முழுமையாக மூடப்பட்டுவிட்டதால், அதற்கு மாற்றாக மாணவர்கள் இனி ஸ்கில்டு ஒர்க்கர் இன் மேனிடோபா என்ற புதிய கடினமான குடியேற்ற முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த புதிய விதியின்படி, மாணவர்கள் மாகாணத்தின் ஒரே முதலாளியிடம் தொடர்ந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் முழுநேரப் பணியில் நீடித்திருப்பதுடன், அதற்கான முறையான நீண்ட கால வேலை வாய்ப்பு உத்தரவாதக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisement

வேலை அனுபவம்

கல்வித் தகுதியைத் தாண்டி வேலை அனுபவமும் செட்டில்மென்ட் பிளானும் கட்டாயம்

புதிய குடியேற்றக் கொள்கையின்படி, சர்வதேசப் பட்டதாரிகள் தங்களின் படிப்பு சார்ந்த துறையில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற பழைய விதி தளர்த்தப்பட்டாலும், மொழியறிவுத் தகுதி மற்றும் பொருளாதாரத் சுயசார்புத் திறன் ஆகியவை கடுமையாக மாற்றப்பட்டுள்ளன. பழைய திட்டத்தில் இல்லாத ஒரு புதிய நிபந்தனையாக, விண்ணப்பதாரர்கள் தங்களின் நீண்ட காலப் பொருளாதாரத் திட்டத்தை விளக்கும் செட்டில்மென்ட் பிளான் என்ற ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாணவர்கள் பகுதிநேரமாகப் படித்தபோது பெற்ற வேலை அனுபவங்களோ அல்லது சுயதொழில் மூலமாகப் பெற்ற அனுபவங்களோ இந்த புதிய ஸ்கில்டு ஒர்க்கர் பிஆர் திட்டத்தின் கீழ் தகுதியான வேலை அனுபவமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Advertisement

ஆராய்ச்சி மாணவர்களுக்கு சலுகை

மாஸ்டர்ஸ் மற்றும் பிஹெச்டி மாணவர்களுக்கு மாறாத விதிகளின் சலுகை

மேனிடோபா மாகாண அரசு இந்த அதிரடி மாற்றங்களைச் செய்திருந்தாலும், உயர்கல்வி பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கிராஜுவேட் இன்டர்ன்ஷிப் பாத்வே திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. கனடாவின் புகழ்பெற்ற மிட்டாக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் நிதியுதவி பெறும் இன்டர்ன்ஷிப் திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கும் மாஸ்டர்ஸ் மற்றும் பிஹெச்டி பட்டதாரி மாணவர்களுக்குப் பழைய முறைப்படியே நேரடி பிஆர் முன்னுரிமைத் தகுதி தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கனடாவில் குடியேற விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி வெறும் உள்ளூர் பட்டப்படிப்பு சான்றிதழ் மட்டும் பிஆர் பெறப் போதாது. மாறாக, அங்குள்ள நிறுவனங்களில் உங்களின் நேரடிப் பங்களிப்பும், வேலை அனுபவமும் மட்டுமே நிரந்தரக் குடியுரிமையை நிர்ணயிக்கும்.

Advertisement