சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா
கனடாவில் நிலவும் வீட்டு நெருக்கடி பிரச்சனைகள், சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை குறைக்க செய்துள்ளது. வீட்டு நெருக்கடி தொடர்பான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் 2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் சேர்க்கையில் 35% குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், வீடுகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. வீடுகளின் பற்றாக்குறையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கனடா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. "செப்டம்பர்-2024 செமஸ்டருக்கு முன்னதாக, கல்வி நிறுவனங்கள் போதுமான தரத்துடன் இயங்குவதை உறுதிசெய்ய, விசாவைக் கட்டுப்படுத்துவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்று முன்பு கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறி இருந்தார்.
சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு விவரங்கள்
சர்வதேச மாணவர் எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செய்லபடுத்தப்பட இருக்கும் ஒரு தற்காலிக கொள்கையாகும். ஏற்கனவே கனடாவின் படிப்பு அனுமதி பெற்றவர்களையும், படிப்பு அனுமதியின் புதுப்பித்தலுக்கு காத்திருப்பவர்களையும் இது பாதிக்காது. கனடாவில் இளங்கலையை முடித்துவிட்டு, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடரும் மாணவர்களுக்கு இது விலக்கு அளிக்கிறது. கனடாவில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் இருக்கும் தங்குமிடம் மற்றும் வீட்டு வசதியின் அடிப்படையில் மாணவர்களுக்கான ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாகாண நிர்வாகங்கள் எந்தெந்த கல்வி நிறுவனங்களுக்கு எத்தனை சீட்டுகளை ஒதுக்கலாம் என்பதை முடிவு செய்யும். எனவே, இனி மாணவர் அனுமதி விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாகாணம் அல்லது பிரதேசத்தின் சான்றளிப்பு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.