அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன்
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்ரேலிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனையை சுற்றி நடைபெறும் போரால், அல்-ஷிஃபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மருத்துவமனையை பொருத்தவரையில் குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். "வடக்கு காசாவில் ஹமாஸ் இடம் உள்ள எரிபொருளை, அவர்கள் மருத்துவமனைக்கு வழங்குவதை பார்க்க விரும்புவதாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரின் கருத்துக்களை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
மயானமாக மாறிவரும் அல்-ஷிஃபா மருத்துவமனை- டபிள்யுஎச்ஓ
அல்-ஷிஃபா மருத்துவமனை மிகப்பெரிய மயானமாக மாறி வருவதாக, உலக சுகாதார அமைப்பு(டபிள்யுஎச்ஓ) கூறியுள்ளது. வடக்கு காசாவில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையைச் சுற்றி, கடந்த சில நாட்களாக போர் தீவிரமடைந்துள்ளது. மருத்துவமனை அடியில் உள்ள பதுங்கு குழிகளை ஹமாஸ் கட்டளை மையங்களாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதை மருத்துவமனை நிர்வாகமும், ஹமாசும் முழுவதுமாக மறுத்துள்ளது. "மருத்துவமனையைச் சுற்றி இறந்தவர்களின் உடல்கள் உள்ளன, அவை கவனிக்கப்படவோ, புதைக்கவோ எடுத்துச் செல்ல முடியவில்லை" என டபிள்யுஎச்ஓ செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். "மருத்துவமனையில் உள்ள பிணங்களை வெளியே எடுத்துச் சென்று புதைக்க இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை, மருத்துவமனையில் உள்ள பிணங்களை நாய்கள் தின்கின்றன" என மருத்துவர் முகமது அபு செல்மியா கூறியுள்ளார்.
இஸ்ரேல் தொடர்பு கொள்ளவில்லை- அல்-ஷிஃபா மருத்துவர்
அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போருக்கு பின்னர், காசாவிற்குள் வரும் எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை துண்டித்து விட்டது. இந்நிலையில், அல்-ஷிஃபா மருத்துவமனையில் எரிபொருள், மின்சாரம் இல்லாமல் மருத்துவப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாமல் தற்போது வரை 3 குறைமாத குழந்தைகளும், 7 நபர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அச்கிச்சை பெற முடியாததால் ஓரிரு நாட்களே உயிர் வாழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்மருத்துவமனையின் மருத்துவர் அபு செல்மியாவிடம், இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளை மீட்க முன்வந்ததும், எரிபொருளை அனுப்பியது குறித்தும் பிபிசி கேட்டது. அதற்கு அவர், இஸ்ரேல் ராணுவம் அந்த திட்டங்களுடன் தங்களை அணுகவில்லை எனவும், மாறாக தாங்கள்தான் அவர்களை தொடர்புகொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.