காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன்
காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பைடன், இஸ்ரேல் தாக்குதலால் மோசமடைந்து வரும் பாலஸ்தீனியர்களின் நிலைமை குறித்து பேசினார். மேலும் பேசிய பைடன், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இஸ்ரேல், எகிப்து, ஜோடான் மற்றும் ஐநா ஆகியோருடன் அதிபரின் குழு இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். "பெரும்பான்மையான பாலஸ்தீனியர்களுக்கு ஹமாசுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மறக்க கூடாது" இன்று சுட்டிக்காட்டிய பைடன், ஹமாஸ் ஆயுத குழுவால் பாலஸ்தீனர்களும் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
அல்கொய்தாவை புனிதம் ஆகிய ஹமாஸ் அமைப்பு- பைடன் குற்றச்சாட்டு
காஸாவை ஆண்டுவரும் ஹமாஸ் ஆயுத குழுவின் நடவடிக்கைகள், 'அல்கொய்தா' அமைப்பையே தூய்மையானதாக காட்டுகிறது என்ற அமெரிக்க அதிபர், ஹமாஸ் "ஒரு தீய சக்தி" எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஹமாஸ் பிணைய கைதிகளாக பிடித்துச் சென்ற அமெரிக்கர்களை மீட்க, தன் அரசு 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்வினையாக, காஸா மீது இஸ்ரேல் குண்டு மழைபொழிந்து வருகிறது. மேலும் இஸ்ரேல், காஸா பகுதிக்கு மின்சாரம், எரிபொருள், உணவு பொருட்கள் இணைப்பையும் துண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் தாக்குதலின் எதிரொலியாக, காஸாவில் மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகள் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.