சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். கடந்த வாரம் வீசிய சூப்பர் புயலான டோக்சுரியின் காரணமாக பெய்ஜிங் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நான்கு நாட்களாகியும் இன்னும் பெய்ஜிங்கில் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், நகரத்தில் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களை வெள்ளம் பாதித்துள்ளதால், ரயில் சேவைகள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் சீனாவை நோக்கி நகர்ந்த டோக்சுரி புயல், பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானை கடந்து சென்றது. இதனால், அந்த நாடுகளிலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
150,000 குடும்பங்கள் தண்ணீர் இன்றி தவிப்பு
இந்த வாரம் கனமழை நீடிக்கும் என்றும், பெய்ஜிங், தியான்ஜின் மற்றும் ஹெபெய் மாகாணத்தைச் சுற்றியுள்ள வடக்குப் பகுதிகளில் வெள்ளம் மோசமடையக்கூடும் என்றும் சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் எச்சரித்துள்ளது. எத்தனை பேர் பலியாகியுள்ளனர் அல்லது எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேற்கு பெய்ஜிங்கின் மென்டூகு மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு ரயில் நிலையத்திலும் அதைச் சுற்றி உள்ள இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் வழங்க இன்று அதிகாலையில் இராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. அந்த மாவட்டத்தில் உள்ள சுமார் 150,000 வீடுகள் தண்ணீர் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.