Loading...
ஷேக் ஹசீனா சொந்த ஊரில் வெடித்த பயங்கர வன்முறை: பெட்ரோல் குண்டு வீச்சு & மோதலில் ஒருவர் பலி
ஷேக் ஹசீனா சொந்த ஊரில் பயங்கர வன்முறை

ஷேக் ஹசீனா சொந்த ஊரில் வெடித்த பயங்கர வன்முறை: பெட்ரோல் குண்டு வீச்சு & மோதலில் ஒருவர் பலி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2026
05:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வரும் டிசம்பர் 16 ஆம் தேதி தாயகம் திரும்பப் போவதாக அறிவித்துள்ள நிலையில் வங்கதேசத்தில் மீண்டும் பயங்கர அரசியல் வன்முறை வெடித்துள்ளது. தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சி அறிவித்துள்ள இரண்டு நாள் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தின்போது ஆளும் பிஎன்பி கட்சியினருக்கும் அவாமி லீக் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஷேக் ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்ச் நகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷரியத்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் அவாமி லீக் தொண்டர் இப்ராஹிம் செபாஹி கொல்லப்பட்டுள்ளார்.

தீவைப்புச் சம்பவங்கள்

கோபால்கஞ்ச் மற்றும் பத்மா பாலம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்

ஷரியத்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கிக்கொண்டதில் படுகாயமடைந்த இப்ராஹிம் செபாஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேபோல் ஷேக் ஹசீனாவின் அரசியல் கோட்டையான கோபால்கஞ்ச் நகரில் அவாமி லீக் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றதால் அங்குள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன.

தென்மேற்கு வங்கதேசத்தை தலைநகர் டாக்காவுடன் இணைக்கும் முக்கியப் பத்மா பாலம் அருகே திரண்ட வன்முறைக் கும்பல்கள் பல கடைகள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

துணை ராணுவப் படை குவிப்பு

கட்சித் தடையை நீக்கக் கோரி அவாமி லீக் போராட்டமும் துணை ராணுவப் படை குவிப்பும்

கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சிக்கு வந்த பிஎன்பி அரசு அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்கு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்கக் கோரி அக்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோபால்கஞ்ச் பகுதியில் 97 சதவீத மக்கள் அவாமி லீக் ஆதரவாளர்கள் என்றும் தங்களது கட்சியின் மீதான அரசியல் பழிவாங்கலை எதிர்த்துக் குடும்பத்துடன் வீதிகளில் இறங்கியுள்ளதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வன்முறை பரவுவதைத் தடுக்கக் கோபால்கஞ்ச் மற்றும் பதற்றமான மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுத் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அரசியல் நெருக்கடி

டிசம்பர் 16-ல் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா அறிவிப்பால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள அரசியல் நெருக்கடி

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 79 வயதான ஷேக் ஹசீனாவுக்கு 2025 நவம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை நிராகரித்துள்ள ஷேக் ஹசீனா வரும் டிசம்பர் 16 ஆம் தேதி வங்கதேச வெற்றி தினத்தன்று நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் அவருக்கு விமான வசதி அல்லது பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ள வங்கதேச அரசு நாடுகடத்தல் நடைமுறை மூலமே அவரைக் கொண்டு வர வேண்டும் என பிடிவாதமாக உள்ளதால் அங்கு அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT