
2026 தொடக்கத்திற்குள் பங்களாதேஷில் தேர்தல்; முகமது யூனுஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷின் இடைக்காலத் தலைமை ஆலோசகரான, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், நாட்டின் பொதுத் தேர்தல்கள் 2025 இன் பிற்பகுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.
அரசு தொலைக்காட்சி மூலம் தேசத்தில் உரையாற்றிய முகமது யூனுஸ், காலக்கெடுவை இறுதி செய்வதற்கு முன் விரிவான தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.
84 வயதான முகமது யூனுஸ், ஆகஸ்ட் மாதம் மாணவர் தலைமையிலான கிளர்ச்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் நிர்வாகம் அகற்றப்பட்ட பின்னர் நிறுவப்பட்ட காபந்து அரசாங்கத்தை தலைமை ஆலோசகராக இருந்து வழிநடத்துகிறார்.
முன்னதாக, நூற்றுக்கணக்கானவர்களின் இறப்புக்கு காரணமான வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.
சீர்த்திருத்தங்கள்
சீர்திருத்தங்களுக்கு பின்னர் தேர்தல்
முகமது யூனுஸ் ஜனநாயக நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளித்தார். சீர்திருத்தங்களை மேற்பார்வையிட கமிஷன்களைத் தொடங்கினார்.
புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியல் போன்ற குறைந்தபட்ச சீர்திருத்தங்களுக்கு அரசியல் கட்சிகள் ஒப்புக் கொண்டால், 2025 நவம்பர் மாதத்திற்கு முன்னதாகவே தேர்தல்கள் நடக்கலாம் என்று அவர் கூறினார்.
வாக்காளர் பதிவு சவால்கள் குறித்து உரையாற்றிய அவர், நம்பகத்தன்மை வாய்ந்த வாக்கெடுப்பை உறுதி செய்வதற்காக முதல்முறை வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் தவறான பதிவுகளை நீக்குவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
100% வாக்குப்பதிவை அடைவதற்கான தனது பார்வையை முகமது யூனுஸ் வெளிப்படுத்தினார்.
அத்தகைய பங்கேற்பு குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் என்று வலியுறுத்தினார்.