Loading...
வங்கதேச அரசியலில் அடுத்த புயல்! அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா
வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் ராஜினாமா

வங்கதேச அரசியலில் அடுத்த புயல்! அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
07:07 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்தின் 22வது அதிபராகப் பொறுப்பு வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) திடீரென ராஜினாமா செய்துள்ளார். தீவிர உடல்நலக் குறைவு மற்றும் நரம்பியல் சார்ந்த பாதிப்புகள் காரணமாகத் தன்னால் அரசியல் சாசனப் பதவியின் கடமைகளை சரியாக ஆற்ற இயலவில்லை எனக் கூறி, நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபராகப் பொறுப்பேற்ற இவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2028ல் தான் நிறைவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா

ராஜினாமாவிற்கு உடலநலக் குறைவே முதன்மை காரணம்

தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முகமது ஷஹாபுதீன், தான் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தனக்கு ஆட்டோனமிக் நியூரோபதி என்ற நரம்பியல் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் அவ்வப்போது தான் தற்காலிகமாக மயக்க நிலையை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளால் தமக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனாவுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மிக நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்பட்ட முகமது ஷஹாபுதீனின் பதவி விலகல், ஹசீனாவிற்கும் அவரது அவாமி லீக் கட்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

2024ல் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் புகுந்த நிலையில், உயர் அரசியலமைப்புப் பதவியில் இருந்த ஹசீனாவின் கடைசி முக்கிய ஆதரவாளராக அதிபர் மட்டுமே இருந்தார்.

தற்போது இவரது விலகலின் மூலம் வங்கதேச உயர் அதிகாரப் பீடத்தில் ஹசீனாவிற்கான ஆதரவு முற்றிலும் இல்லாமல் போயுள்ளது.

ADVERTISEMENT

சபாநாயகர்

சபாநாயகர் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பு

அதிபர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து, வங்கதேச அரசியல் சாசனப் பிரிவு 54ன் படி, நாடாளுமன்ற சபாநாயகர் மேஜர் (ஓய்வு) ஹஃபிஸ் உதீன் அகமது புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால அதிபராகப் பொறுப்புகளைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைத் தளபதியாக அதிபர் செயல்பட்ட போதிலும், 17.3 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில் நாட்டின் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் பிரதமரிடமே குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அரசியல் மாற்றம்

வங்கதேசத்தில் தொடரும் அரசியல் மாற்றம்

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இரத்த போராட்டங்களுக்குப் பிறகு ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு, இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டதில் இருந்தே அதிபர் ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்த சூழலில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அதிபரின் இந்தத் திடீர் ராஜினாமா வங்கதேசத்தின் அரசியல் சூழலில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT