ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது முதல்முறையன்று, தெரியுமா?
பங்களாதேஷின் பிரதமர் பதிவியிலிருந்து விலகிய ஷேக் ஹசினா இந்தியாவிற்கு தப்பி வந்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அவர் இந்தியாவிற்கு தப்பி வருவது இது முதல்முறையன்று என்பது தெரியுமா? கடந்த 1975 ஆம் ஆண்டு, தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் உட்பட அவரது குடும்பத்தினர் பலரும் படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஷேக் ஹசீனா தனது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் அவர் அண்டைநாடான இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர்கள் 1975 முதல் 1981 வரை ஆறு வருடங்களாக டெல்லியின் பண்டாரா சாலையில் ஒரு போலியான அடையாளத்துடன் வாழ்ந்தனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
1975 படுகொலை மற்றும் ஹசீனாவின் வெளியேற்றம்
ஆகஸ்ட் 15, 1975 இல், ஷேக் ஹசீனாவின் தந்தை, வங்காளதேசத்தின் ஸ்தாபக தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்களுடன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் வங்கதேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டை அரசியல் கொந்தளிப்பு மற்றும் இராணுவ ஆட்சிக்குள் தள்ளியது. அப்போது மேற்கு ஜெர்மனியில் இருந்த ஹசீனாவிற்கு, 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான பங்களாதேஷின் விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றிய நாடான இந்தியாவில் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு வழியின்றி தனது கணவர் MA Wazed Miah உடன் இங்கே குடிபெயர்ந்தார். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையிலான அரசு, ஹசீனாவுக்கு உதவிக் கரம் நீட்டி, அவருக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் அளித்தது.