ஆஸ்திரியாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒரு புதிய சட்ட மசோதாவிற்குப் பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டம் 14 வயதுக்குட்பட்ட முஸ்லீம் மாணவிகள் பள்ளிகளில் தலையை மறைக்கும் முக்காடு அல்லது ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கிறது. ஆஸ்திரியாவின் பழமைவாத அரசு முன்மொழிந்த இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சியான கிரீன் பார்ட்டியைத் தவிர, மற்ற பெரும்பான்மைக் கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தச் சட்டம், சிறுமிகளை ஒடுக்குமுறையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று ஆஸ்திரிய அரசாங்கம் வாதிடுகிறது. மேலும், ஹிஜாப் சிறுமிளை பாலியல் ரீதியாக அடையாளப்படுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அபராதம்
விதி மீறினால் அபராதம்
இந்தத் தடை இஸ்லாமிய முக்காடுகளின் ஹிஜாப் மற்றும் புர்கா உட்பட அனைத்து வடிவங்களுக்கும் பொருந்தும். இதனை மீறும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு 150 முதல் 800 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும். சுமார் 12,000 சிறுமிகள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல 2019ஆம் ஆண்டில் ஆரம்பப் பள்ளிகளில் தலைக்கவசம் அணிவதைத் தடை செய்ய ஆஸ்திரியா முயற்சித்தது, ஆனால் அது அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது.
எதிர்ப்பு
மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பு
இந்தச் சட்டத்தை மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் ஆஸ்திரியாவில் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளன. இந்தச் சட்டம் முஸ்லீம் சிறுமிகளுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆஸ்திரியா விமர்சித்துள்ளது. மேலும், இது முஸ்லீம்களுக்கு எதிரான இனவெறியின் வெளிப்பாடு என்றும், சமூகத்தில் பிளவை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. குழந்தைகள் தங்கள் உடலைப் பற்றி முடிவெடுக்கும் சுதந்திரத்தை மறுப்பதன் மூலம், அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவதையும், களங்கப்படுத்தப்படுவதையும் இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகளில் மத அடையாளங்களைத் தடை செய்வது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.