அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் அஞ்சப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் 'ராபர்ட் கார்டு', 40 எனக் கண்டறிந்துள்ள போலீசார், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இது குறித்து மைனே மாகாண காவல்துறை, எக்ஸ் (ட்விட்டரில்) அளித்துள்ள தகவலில், தேடப்படும் நபர் ஆயுதம் வைத்திருப்பதாக எச்சரித்துள்ளனர். "நாங்கள் மக்களை அவரவர் வீட்டில் தங்கி இருக்க கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து உங்கள் வீட்டிற்குள் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இருங்கள்" என அப்பகுதி மக்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விவரிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தேடுதலை தொடங்கிய போலீசார்
பவுலிங் விளையாட்டு மையம் மற்றும் உணவு விடுதியில் எனக் குறைந்தது 2 இடத்தில் துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்ய காவல்துறையினர், தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ராபர்ட் கார்டு, முன்னாள் ராணுவ வீரர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே குடும்ப வன்முறையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் அண்மையில், காதில் வினோத சத்தங்கள் கேட்பதற்காக, மனநல ஆரோக்கிய மையத்தில் தங்கி இருந்து 2 வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய லூயிஸ்டன் மேயர் கார்ல் ஷெலைன், "எங்கள் நகரத்திற்கும், எங்கள் மக்களுக்கும் மனம் உடைந்துவிட்டது" என்றும், பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தினார்.