தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா
சீனாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா, திடீரென திட்டமிடாமல் பாகிஸ்தானிற்கு சென்று வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், பாகிஸ்தானிற்கு ஜாக் மா வந்து சென்றதை அந்நாட்டின் அரசு நிறுவனமான Board of Investments-ன் (BOI) முன்னாள் தலைவர் முகமது அஸ்ஃபர் அசானும் உறுதி செய்திருக்கிறார். கடந்த ஜூன் 29-ம் தேதி லாகூரில் தரையிறங்கிய ஜாக் மா, 23 மணி நேரம் பாகிஸ்தானில் செலவிட்டு, ஜூன் 30-ம் தேதி மீண்டும் அந்நாட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். ஜாக் மாவின் பாகிஸ்தான பயணமானது, பாகிஸ்தான் அரசு மற்றும் சீன தூதரகத்திற்குக் உட்பட யாருக்குமே தெரியாது என்பது தான் ஆச்சரியம்.
ஏன் திடீரென பாகிஸ்தான் பயணம் செய்தார் ஜாக் மா?
ஜாக் மாவுடன் மேலும் ஏழு தொழிலதிபர்களும், பாகிஸ்தானுக்கு அவருடன் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. நேபாளில் இருந்து, முன்திட்டமிடப்படாத ஹாங்காங்கின் வணிக விமானப் சேவைப் பிரிவைச் சேர்ந்த விமானத்தின் மூலம், இவர்கள் பாகிஸ்தான் சென்றடைந்திருக்கின்றனர். பாகிஸ்தானில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும், புதிய தொழில்களைத் துவங்கவுமே, ஜாக் மா பாகிஸ்தான் சென்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள், முக்கிய அதிகாரிகளையும் இந்தப் பயணத்தின் போது அவர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜாக் மா, தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பாகிஸ்தான் வந்து சென்றதாக ட்வீட் செய்திருக்கிறார், BOI-ன் முன்னாள் தலைவர் அஸ்ஃபர் அசான். மேலும், பாகிஸ்தானில் முக்கிய தொழிலதிபர்களையும், அதிகாரிகளையும் ஜாக் மா சந்தித்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.